உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவில் நடந்த போட்டித் தேர்வில், 62 பேர் தேர்வாயினர்

திருப்பூர்: விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு, மாவட்ட அளவில் நடந்த போட்டித்தேர்வில், 62 பேர் தேர்வாயினர்; மாநில அளவிலான போட்டித்தேர்வில், அவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, முறையாக விளையாட்டு பயிற்சி அளிக்கும் வகையில், 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் ஐந்து விளையாட்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவ்விடுதிகளில், ஆண்டுதோறும் ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். நடப்பாண்டு சேர்க்கைக்கான, மாவட்ட அளவிலான போட்டித்தேர்வு, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது; 82 மாணவர்கள், 18 மாணவியர் பங்கேற்றனர். கால்பந்து, குத்துச்சண்டை, பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜூடோ, வில் வித்தை, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், டேக்வாண்டோ, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. மண்டல முதன்மை மேலாளர் ராஜமகேந்திரன் மேற்பார்வையில், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர், தகுதியான மாணவ, மாணவியரை தேர்வு செய்தனர். அதன் வாயிலாக, 50 மாணவர்கள், 12 மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடக்கும், மாநில அளவிலான போட்டித்தேர்வில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்