இணைந்து செயல்படுவோம்: ஜி - 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ஈவியான்: “உலக நாடுகள், நன்கொடையாளர் - பெறுநர் என்ற நிலையில் இருந்து, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கூட்டாண்மை நோக்கி நகர வேண்டும்,” என, 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரான்சின் ஈவியான் நகரில் தொடங்கிய 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:உலக நாடுகள் இடையே கூட்டாண்மை பலப்பட நம்பிக்கை மிக அவசியம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, எப்போதும் 'உலகமே ஒரு குடும்பம்' மற்றும் 'மனிதநேயமே முதன்மை' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதனை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும்.எங்கள் நாட்டின், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டம் அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தியா, சிறப்பு அழைப்பாளராக இந்த மாநாட்டில் பங்கேற்பது சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் தேவைகளையும் குரலையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய பாலமாக அமைந்துள்ளது. இனி வருங்காலங்களில், உலகம் 'கொடையாளி - பயனாளி' என்ற நிலையில் இருந்து மாறி, சமத்துவம் மற்றும் ஒற்றுமை அடிப்படையிலான உண்மையான உலகளாவிய கூட்டாண்மையை நோக்கி நகர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.