இலவச கல்விக்கு இறுதி வாய்ப்பு 7,500 பேர் விண்ணப்பம்
கோவை: கோவை மாவட்ட தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச கல்வி பெற, 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இதற்கு மே 20 வரை, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில், 328 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, 15 ஆயிரத்து 619 இடங்கள் உள்ளன.இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் கல்வி பயில, 3,950 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் சேர இதுவரை 7,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்று, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இலவச கல்விக்கு விண்ணப்பிக்க இன்று அவகாசம் முடியவுள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.