போலி ஆசிரியர் பயிற்சி மையம் நடத்தி ரூ.85 லட்சம் மோசடி
சென்னை: போலி ஆசிரியர் பயிற்சி மையத்தை நடத்தி, பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளின் இரண்டாண்டு கல்வி வாழ்க்கையை சீரழித்து, 85 லட்சம் ரூபாயை சுருட்டிய ‘டூபாக்கூர்’ ஆசாமி கைது செய்யப்பட்டார். கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பெற்றோருடன் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில்,‘சென்னை, பொழிச்சலூர், லட்சுமி நகர் முதல் பிரதான சாலையில் கிறிஸ்தவ தர்ம ஸ்தாபன சங்கம் நடத்தி வருபவர் டைட்டஸ். இவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த முரம்பு என்ற ஊரில் பெண்களுக்கான, கிறிஸ்தவ ஆசிரியர் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். அரசு அங்கீகாரம் பெற்றதாக அறிவித்து, ஒரு சீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வசூலித்தார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 39 பேர், 2005ம் ஆண்டு இப்பள்ளியில் சேர்ந்தோம். இரண்டு ஆண்டுகள் படிப்பில், முதலாண்டு தேர்வு எழுதினோம்; ‘ரிசல்ட்’ வரவில்லை. இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுத வைப்பதாக டைட்டஸ் கூறினார். ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்று வரை தேர்வு எழுத முடியவில்லை. நாங்கள் விசாரித்துப் பார்த்ததில் அரசு அங்கீகாரம் இல்லாமல் பணம் சுருட்டும் நோக்கத்தில் பயிற்சி பள்ளியை டைட்டஸ் நடத்தி வருவது தெரியவந்தது. தற்போது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட எங்களுக்கு, கட்டிய பணத்தை மீட்டுத் தரவேண்டும். இரண்டு ஆண்டுகள் எங்களின் வாழ்க்கையை பாழாக்கிய டைட்டஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் புகார் மனுவில் கூறியிருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். இதையடுத்து, அப்பிரிவைச் சேர்ந்த உதவி கமிஷனர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டபோது, புகார் செய்யப்பட்ட டைட்டஸ் மத்திய, மாநில அரசிடம் எந்தவொரு அனுமதியும் பெறாமல் 85 மாணவிகளை பயிற்சி மையத்தில் சேர்த்து, 85 லட்சம் ரூபாயை சுருட்டியது தெரியவந்தது. இதையடுத்து, டைட்டஸ் கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார். கமிஷனர் ஜாங்கிட்டிற்கு பாராட்டு: டைட்டஸ் நடத்திய போலி ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பெற்றோருடன் ஆகஸ்ட் 28ம் தேதி புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தனர். புகார் கொடுத்த சில மணி நேரத்தில் அதிரடி விசாரணை நடத்தி மோசடி ஆசாமி டைட்டஸ் கைது செய்யப்பட்ட தகவல் மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் அனைவரும் கமிஷனர் ஜாங்கிட்டை மீண்டும் சந்தித்து பாராட்டிச் சென்றனர்.