தினமலர் பரிசினை பெற்றனர் மாணவ-மாணவியர்
சென்னை: தினமலர் மற்றும் தாம்பரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரி இணைந்து, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கும் விழா, சென்னையில் பிரியதர்ஷினி பார்க் என்ற ஹோட்டலில் நடைபெற்றது. தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ள, தினமலர் இணையதளத்தில் பதிவு செய்தவர்களிலேயே, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்று ஏற்கனவே கல்விமலர் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி அதற்கான விழா, சென்னையில், பிரியதர்ஷினி பார்க் என்ற ஹோட்டலில் 14-௦05-2011 - சனிக்கிழமை நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தினமலர் வெளியீட்டாளர் திரு. ஆர். லட்சுமிபதி மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி நிறுவனர் திரு. வி.பி. ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பரிசு பெறக்கூடிய மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக கலந்துகொண்டனர். உழைப்பே உயர்வு: இந்நிகழ்ச்சியில் பேசிய தினமலர் வெளியீட்டாளர் திரு. லட்சுமிபதி, "கடந்த 1951 ம் ஆண்டு தொடங்கப்பட்ட தினமலர் நாளிதழ், தொடர்ந்து 60 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நாளிதழை "உண்மையின் உரைகல்" என்றே நாங்கள் அழைக்கிறோம். ஏனெனில் உண்மையான செய்திகளை மட்டுமே வெளியிடுவதால், எந்த அரசு அமைந்தாலும், அதனுடன் எங்களால் ஒத்துபோக முடியவில்லை. எனவே எங்களுக்கு அரசு விளம்பரங்களும் கிடைப்பதில்லை. ஆனால், அதற்காக நாங்கள் பின்வாங்குவதில்லை. மாணவர்களிடம், பத்திரிகை ஈடுபாட்டை அதிகரிக்க செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1970 ம் ஆண்டுகளில், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுக்கான மாதிரி கேள்வி-பதில் பகுதிகளை வெளியிட்டோம். "தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியை ஊர் ஊராக நடத்தினோம். பிறகு "தினமலர் வழிகாட்டி" நிகழ்ச்சியை நடத்தினோம். முன்பு தினமலர் சார்பில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சிரமமாக இருந்தது. ஆனால் இன்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் அந்த பணி எளிமையாக உள்ளது. மாணவர்கள் தங்களின் உழைப்பை நம்ப வேண்டும். கல்லூரியில் ஆசிரியர்கள் சொல்லித்தான் தர முடியும். படிப்பது மாணவர்களின் பொறுப்பு. நமக்கு எது பிடிக்குமோ, அதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். நண்பர்கள் படிக்கிறார்கள் என்று நாமும் அதை படிக்க நினைக்கக்கூடாது. எப்போதுமே, நேர்வழிதான் சிறந்தது. அதுதான் நிலையானது. குறுக்குவழியில் பெறும் வெற்றியானது நிலையற்றது. எனவே மாணவர்கள் வெற்றியை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். வாழ்வில் வெற்றிபெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்" என்றார். தனலட்சுமி பொறியியல் கல்லூரி நிறுவனர் வி.பி. ராமமூர்த்தி பேசியதாவது, "நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். கடுமையான உழைப்பே முன்னேற்றத்திற்கு காரணம். எங்களின் காலத்தில் அதிக கல்லூரிகள் இல்லை, அதிக வழிகாட்டுதல்கள் இல்லை. ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற, ஆங்கில அறிவு மிகவும் அவசியம். ஆண்களைவிட, அனைத்துப் பணிகளையும் பெண்கள் சிறப்பாக செய்கிறார்கள். அதேசமயம், ஆண்கள் முயன்றால், பெண்களை வெல்லலாம்" என்றார். பரிசுகள் வழங்கல்: முதல் பரிசு: செங்கல்பட்டை சேர்ந்த சந்தியா என்ற மாணவி 1191/1200 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால் அவர் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக எடுத்து படித்ததால் மாநில ரேங் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர், தினமலர்-தனலட்சுமி பொறியியல் கல்லூரி சார்பில் முதல் பரிசாக ரூ.40,000௦௦௦ பெற்றார். அவருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு: சென்னையை சேர்ந்த சுருதி கணேஷ் என்ற மாணவி 1188/1200 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் பரிசாக ரூ.25,000௦௦௦ மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார். மூன்றாம் பரிசு: கோவையை சேர்ந்த அஞ்சனா ராகவேந்திரா மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த சுவாதி ஆகிய இருவரும் 1187/1200 மதிப்பெண்கள் பெற்றதால் தலா ரூ.15,000௦௦௦ மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றனர். பரிசுகளை தினமலர் வெளியீட்டாளர் திரு. லட்சுமிபதி மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி நிறுவனர் திரு. ராமமூர்த்தி ஆகியோர் வழங்கினர். மேலும் ஆறுதல் பரிசாக 10 மாணவ-மாணவியருக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டது. அதன் விவரம், ராதிகா - சென்னை - 1186/1200 கவிதா - புதுச்சேரி - 1186/1200 சுபா - மதுரை - 1186/1200 சிந்துகவி - நாமக்கல் - 1186/1200 அஞ்சனா - பொள்ளாச்சி - 1186/1200 வித்யா சகுந்தலா - நெல்லை- 1186/1200 பத்ம பிரபா - பொன்னேரி - 1185/1200 மணிகண்டன் - விழுப்புரம் - 1185/1200 வசந்த குமார் - திருச்சி - 1185/1200 சிவசுப்ரமணியம் - பொன்னேரி - 1185/1200 ஆகியோர் அடங்குவர். தினமலர் பரிசுதான் எங்களுக்கு பெருமை: பரிசு வழங்கல் நிகழ்ச்சியை அடுத்து தங்களின் கருத்துக்களை கூறிய பெற்றோர்களும், மாணவர்களும், "சமூகத்திற்கான கல்வி சேவையை, வணிக நோக்கமின்றி செய்வதில், தினமலர் தன்னிகரற்று விளங்குகிறது. என்ன படிப்பது, எங்கு படிப்பது என்று தெரியாமல் இருக்கும் பலருக்கு தினமலர் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சி பெரிய வரப்பிரசாதம். தினமலர் வழங்கும், மாதிரி கேள்வி-பதில் பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி மிகுந்த ஊக்கம் தருவதாக உள்ளது. தினமலர் வழங்கும் பரிசினையும், சான்றிதழையும் பெறுவது எங்களுக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதை நாங்கள் பெரிய பாராட்டாக நினைக்கிறோம். தினமலர் பரிசை பெற வேண்டும் என்பதற்காகவே, வெளியூர்களிலிருந்து சிரமம் பாராமல் வந்துள்ளோம்" என்றனர். மேலும் சில மாணவ-மாணவியர் பேசும்பொழுது, "அதிக மதிப்பெண் பெற்றதைவிட, தினமலரின் பரிசினை பெறுவதுதான் அதிக மகிழ்ச்சியான விஷயம்" என்றனர். கல்விமலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டி: முதல் 3 பரிசுகளை பெற்ற மாணவிகளான சந்தியா, சுருதி கணேஷ், அஞ்சனா ராகவேந்திரா மற்றும் சுவாதி ஆகிய மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கல்விமலர் இணையதளத்திற்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, "கல்விமலர் இணையதளம் பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருக்கிறது. மிக அற்புதமான மற்றும் அரிதான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குகிறது. உயர்கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைப்பதால் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதேசமயம் இப்படி ஒரு அற்புதமான இணையதளம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை. அதனால் இழப்பு மாணவர் சமூகத்திற்குத்தான். எனவே, கல்விமலர் இணையதளத்தை தொடர்ந்து நல்லமுறையில் விளம்பரப்படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர் சமூகம் முழுமையாக பயன்பெறும். கல்விக்கென்றே இப்படி ஒரு தனி இணையதளத்தை நடத்துவது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று. தமிழ் தவிர, சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற பாடங்களை மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அரசு சார்பில் உரிய அங்கீகாரமும், பாராட்டுதலும் கிடைப்பதில்லை. எனவே அதுபோன்ற சூழலில், கல்விமலர் இணையதளம் போன்ற மாணவர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள், அத்தகைய மாணவர்களுக்கு உற்சாகத்தையும், பாராட்டையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.