உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்பிலிருந்து விலகுவதற்கான அபராதம் உயர்வு

எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்துவிட்டு அடுத்த கல்வி ஆண்டில் ஒரு மாணவர் விலகும் நிலையில் அவர் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதெல்லாம் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தள்ளது. இந்த நிலையில், அதிக கட்-ஆ·ப் மதிப்பெண் காரணமாக பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்துவிட்டு அடுத்த கல்வி ஆண்டில் கட்-ஆப் மதிப்பெண் குறைவாக இருந்தால் அதிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களும் உண்டு. இவ்வாறு எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்த பிறகு, ஒரு மாணவர் அடுத்த கல்வி ஆண்டுகளில் அதில் இருந்து விலகுவதால் காலி இடம் ஏற்படுவதைத் தடுக்க, விலகும் மாணவர்கள் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்படி விலகும் மாணவர்கள் கட்ட வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின் படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாணவ சேர்க்கையை முடித்துவிட வேண்டும். இந்த கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் செப்டம்பர் 25 முதல் 30ம் தேதிக்குள் படிப்பிலிருந்து விலகினால் அபராதமாக ரூ.50,000 செலுத்த வேண்டும். செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு விலகினாலோ அல்லது அடுத்த கல்வி ஆண்டுகளில் விலகினாலோ அபராதத் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்