உடற்பயிற்சி கல்வியில் அரசு அக்கறை செலுத்துமா?
மதுரை: தமிழகத்தில் பள்ளிக்கு ஒருவர் அல்லது இருவர் வீதம் உடற்கல்வி ஆசிரியர்கள் இருப்பதால், மாணவர்களின் உடல்நலன், விளையாட்டில் தமிழகம் பின்தங்கியே உள்ளது. பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி, ஒருநாள் யோகாப் பயிற்சி, வெள்ளிக்கிழமை தோறும் ஒட்டுமொத்த அணிவகுப்பு நடத்த வேண்டும். ஆனால் பள்ளிகளில் உடற்கல்வி போதிக்கப்படுகிறதா என்பது ஆசிரியர்களுக்கே வெளிச்சம். ஏனென்றால் மூன்றாயிரம் மாணவர்கள் இருந்தாலும் ஒரே உடற்பயிற்சி ஆசிரியர்தான் கவனிக்கிறார். ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியரும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உடற்கல்வி இயக்குனரும் பாடம் நடத்துகின்றனர். அரசுப் பள்ளி, உதவிபெறும், பகுதிநேர உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர், சுயநிதிப் பள்ளிகள் அனைத்திலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை, 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற வீதத்தில், பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். பின்னர் அரசாணை 525ன் படி, பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும், இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர் இருந்தால் போதும் என திருத்தியமைக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் கூட, அந்த இடத்தை நிரப்புவதில்லை. இதனால் பள்ளி மாணவர்களின் சுகாதாரம், ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. பணி என்ன? பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையில் ஆரோக்கிய கல்வி, பாதுகாப்பு கல்வி கற்பிக்கவேண்டும். பழைய, புதிய விளையாட்டுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறுவட்ட, வட்ட, மாவட்ட, மண்டல, மாநிலப் போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும். இறைவணக்கத்தின் போது மாணவர்களை ஒழுங்குபடுத்துவதும் முக்கிய வேலை. சில பள்ளிகளில் எந்த விழாக்கள் நடந்தாலும், உடற்கல்வி ஆசிரியர் தலையில் சுமத்தி விடுவர். இவ்வளவு பணிகளைத் தாண்டி, ஆரோக்கிய கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் கற்பிப்பது இயலாத காரியம். பள்ளி சென்றாலே பாடங்களை படிப்பது மட்டும்தான் மாணவர்களின் இலக்கு என பெற்றோர், ஆசிரியர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். அதன் விளைவு, விளையாட்டைப் பற்றிய ஆர்வமும், விழிப்புணர்வும் மாணவர்களிடையே இல்லை. பாடம் நடத்தவும், பயிற்சி அளிக்கவும் போதிய நேரமின்றி ஆசிரியர்கள் தவிக்கின்றனர். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வெல்வதன் மூலமே நமது விளையாட்டுத் திறமையை நிரூபிக்க முடியும். எனவே பழைய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்தால், விளையாட்டுத் துறையில் மாணவர்கள் பிரகாசிக்க முடியும்.