ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வியில் ‘டாப்’
புதுடில்லி: ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு கடந்த 2006ம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தியது. 12 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரது கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடத்திறன் இதில் ஆராயப்பட்டது. அரசு பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையில் படிக்கும் 49 ஆயிரத்து 521 மாணவ, மாணவியரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களது கணித புலமையும், இலக்கணம், சொற்புலமை, கட்டுரை எழுதும் திறன் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டன. அதில் நகரப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்கள் சிறந்து விளங்குவது கண்டறியப்பட்டது. முந்தைய ஆய்வில், 58.14 சதவிதமாக இருந்த கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சி விகிதம் இந்த ஆய்வில் 61 சதவீதமாக உயர்ந்திருந்து. அதேசமயம், நகரப்புற மாணவர்களின் வளர்ச்சி விகிதம் 58.52 சதவீதத்தில் இருந்து 59 சதவீதமாக மட்டுமே உயர்ந்திருந்தது. மேலும், மாணவியரும் கணிதப் பாடத்தில் சிறந்து விளங்குவது கண்டறியப்பட்டது.