தமிழகத்தில் அமைதியாக கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது
"தமிழகத்தில் அமைதியாக கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது" என்று தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறினார். சென்னை ஆதம்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவ, மாணவியருக்கு உதவி நிதி வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கி, தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் அமைதியாக கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கில், 80 சதவீதம் பேர் படித்துள்ளனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. தினமலர் நாளிதழ் மூலம் கடந்த 20 வருடங்களாக கல்விக்காக பாடுபட்டு வருகிறோம். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, "ஜெயித்துக் காட்வோம்" நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறோம். இதற்கு மாணவ, மாணவியர் அதிகம் வருகின்றனர். அவர்கள் ஆர்வத்துடன் குறிப்பெடுக்கும் விதத்தை பார்க்கும் போது, சமுதாயத்தில் அமைதிப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது. இம்மேடையில் பேசிய, ஐராவதம் மகாதேவனை என் குரு என்று தான் நான் சொல்வேன். தமிழில் எழுத்துக்கள் அதிகம். இந்த எழுத்தைக் குறைக்க பெரியார் தமிழ் சீர்திருத்த எழுத்துக்களை அறிமுகம் செய்தார். நான் 1977ம் ஆண்டு, தினமலர் நாளிதழில் இந்த எழுத்து சீர்திருத்தத்தை புகுத்தினேன்.தொன்மையான தமிழ் எழுத்துக்களை தெரிந்து கொள்ள படித்தேன். அப்போது, 1984ம் ஆண்டு மதுரையில் கிடைத்த செப்புக் காசு, பெருவழுதி என்று பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தேன். பெருவழுதியின் பெயர் புறநானூற்றில் உள்ளது. இந்நாணயத்தை ஐராவதம் மகாதேவனிடம் காட்டினேன். அற்புதமான கண்டுபிடிப்பு என்றார். நான் படித்தது சரிதான் என்று என்னை பாராட்டினார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கிராமத்துப் பகுதி குழந்தைகள் படிக்க வரும் போது, சமுதாயத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்.இவ்வாறு இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். நிகழ்ச்சியில், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்துவிட்டு ஐ.டி.ஐ., படித்து வரும் ஏழை மாணவ, மாணவியர் 92 பேருக்கு, 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.