உள்ளூர் செய்திகள்

அபினவ் பிந்தராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

காட்டாங்கொளத்தூர், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின் நான்காவது பட்டமளிப்பு விழா செப்., 7ம் தேதி நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாதவன் நாயருக்கு விஞ்ஞானத்திற்கான கவுரவ டாக்டர் பட்டமும், பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு இலக்கியத்திற்கான கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கி கவுரவித்தார். பின்னர், விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதங்கங்களையும், பட்டங்களையும் வழங்கி கவர்னர் பர்னாலா பேசுகையில், ‘இந்தியாவின் தூண்களாக விளங்கும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பெருமைச் சேர்த்த அபினவ் பிந்த்ரா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமையடைகிறேன். உயர் கல்வியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கல்வி அறிவு புகட்டுவதில் தனியார் கல்லூரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் எதுவாக இருந்தாலும், உலகத்தரத்திற்கு  நிகராக கல்வி அளிக்க வேண்டும்’ என்றார். இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பேசுகையில், ‘நம் நாட்டின் வளர்ச்சிக்கு படித்த இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட வேண்டும்’ என்றார். அபினவ் பிந்த்ரா பேசுகையில், ‘இந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற்றது பெருமையை தேடித்தந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டுக்களையும் வளர்க்க நான் முயற்சி செய்வேன். ஒலிம்பிக்கில் இந்தியா மூன்று பதக்கங்கள் பெற்றதோடு நிற்காமல் மேலும் பல பதக்கங்களை பெற முயற்சிக்க வேண்டும். வாழ்க்கையில் கல்வியை ஒரு குறிக்கோளாக கொள்வததோடு, விளையாட்டில் சாதிப்பதையும் ஒரு கொள்கையாக கொள்ள வேண்டும். படிப்பு முடித்து வேலைக்கு சென்றாலும், உடல் நலத்திற்காக ஏதேனும் ஒரு விளையாட்டை தேர்வு செய்து விளையாடிக் கொண் டிருக்க வேண்டும்’, என்றார். முன்னதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சத்யநாராயணன், சிறப்பு விருந்தினர்களை வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.  பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து விழாவிற்கு தலைமை தாங்கினார். இணைத் துணை வேந்தர் கணேசன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்