‘தொழிற்கல்வியில் தமிழகம் சாதனை’: பொன்முடி பெருமிதம்
விழுப்புரம்: தொழிற்கல்வியை பொறுத்தவரை அகில இந்திய அளவில் தமிழகம் சாதனை படைத்துள்ளது என அமைச்சர் பொன்முடி பேசினார். விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியின் புதிய வகுப்புகள் துவக்க விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் கல்வி கற்போரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். அனைவருக்கும் கல்வி என்பதைவிட அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தை கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறார்கள். மாவட்டத்தில் ஆரம்பக் கல்வி, நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். தொழிற்கல்வியை பொறுத்தவரை அகில இந்திய அளவில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. அகில இந்திய அளவில் 6 முதல் 7 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கு மேல் மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள். அகில இந்திய அளவில் 6ல் ஒரு பங்கு மாணவர்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. 2005ம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் பயில கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரம். தற்போது 2008ம் ஆண்டில் அரசுக் கல்லூரிகளில் மட்டும் 78 ஆயிரத்து 270 மாணவர்கள் படித்து வருகிறார்கள். தமிழக அளவில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 78 ஆயிரம் மாணவர்களில், 34 ஆயிரத்து 309 பேர் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள். சுதந்தரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழகத்தில் மொத்தம் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் தான் இருந்து வந்தது. ஆனால் தமிழக முதல்வர் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 6 புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை துவக்கி வைத்துள்ளார். அது தான் தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்கு செய்துள்ள சாதனை. இக்கல்லூரியில் 100 மாணவிகள் உள்பட மொத்தம் 241 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நீங்கள் புதிய கட்டத்தில் படிப்பீர்கள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 14 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களில் உயர் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தேசிய சாராசரி 25 சதவீதமாக இருக்க வேண்டும். இதில் தமிழகத்தில் 14-25 வயது உயர் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கேரளாவிற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. எனவே அறிவு வளர்க்கும் களமாக இந்த கல்லூரியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.