நீதிமன்றத்திற்குள் நுழைய சட்ட மாணவர்களுக்கு நிபந்தனை
சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டக்கல்லூரி மாணவ தாக்கல் செய்துள்ள பொது நல மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாணவி தொடுத்த மனுவில், சட்டம் பயிலும் மாணவர்கள் வழக்கு விசாரணை பற்றி கற்றுக் கொள்வதற்கு வழக்கறிஞர்களின் மாணவர்களாக நீதிமன்றத்திற்குள் வருவது வழக்கம். ஆனால், இப்போது உயர்நீதிமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்திற்குள் மாணவர்கள் வருவதற்கு சிரமமாக உள்ளது. மாணவர்களை அனுமதிக்க காவல்துறையினர் மறுக்கின்றனர். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெறும் என்ற அனுபவம் பெற முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது. எங்களை நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, படிப்பதற்காகவும், வழக்கறிஞர் தொழில் அனுபவம் பெறவும் நீதிமன்றத்திற்குள் வர வேண்டும் என்று மாணவர்கள் கூறினாலும், வழக்கறிஞர்கள் நடத்தும் பேராட்டத்தில்தான் அதிகமாக கலந்து கொள்கிறார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தது. மேலும், நீதிபதிகள் அளித்த உத்தரவில், சட்டம் சம்பந்தமான கல்வியை கற்க நீதிமன்றத்திற்கு வருவதாக மாணவர் கூறியுள்ளார். எனவே இங்கு வரும் மாணவர்கள், போராட்டம், தர்ணா உள்ளிட்ட நீதிமன்றப் பணிகளை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதற்கான பிரமாண பத்திரத்தை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகே தகுந்த உத்தரவை பிறப்பிப்போம். வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.