உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்

திருச்சி பாரதிதாசன் பல்கலை., 28வது பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ரோசையா, 395 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட உயர்கல்வியை தமிழகத்தில் உருவாக்குவதும், நலிவடைந்த பிரிவினை சேர்ந்த கிராமப்புற மாணவர்களுக்கு அத்தகைய உயர்கல்வியை அளிப்பதுமே தமிழக அரசின் விருப்பம். கிராமப்புறமாக இருந்தாலும், நகரப்புறமாக இருந்தாலும், பொறியியல் படிப்பு பயில்வதை விட, மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். மாணவர்களின் தேவையை நன்கறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆட்சியமைத்து, பதவியேற்ற 100 நாட்களில், இதுவரை இல்லாத அளவுக்கு 11 கல்லூரிகளை அறிவித்து, இந்தாண்டு முதல் மாணவர்கள் பயில்கின்றனர். அனைத்து கல்லூரிகளும் கிராமப்புற மாணவர்கள் பயன்படும் வகையில், கிராமங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்காக, இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே யாராலும் கொண்டு வரப்படாத அற்புதமானது இத்திட்டம். எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்துக்கு ஒப்பானது. அனைத்து கல்லூரிகளுக்கும் கூடிய விரைவில் லேப்-டாப் வந்துசேரும். வெளிநாடுகளில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 54.4 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் 13.5 சதவீதமாகவும், தமிழகத்தில் 18 சதவீதமாகவும் இருக்கிறது. வரும் 2025ம் ஆண்டு, உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்