‘ஐ.டி.,யில் வேலைவாய்ப்பு குறையும்; உற்பத்தித்துறையில் அதிகரிக்கும்’
ஐ.டி., துறையின் வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெகுவாக குறையும். இது உற்பத்தி சார்ந்த துறைக்கு நல்ல செய்தி. இதனால், உற்பத்தி துறையில் இன்ஜினியரிங் திறன் சிறப்பாக இருக்கும் என்று இன்போசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை (கல்வி மற்றும் ஆராய்ச்சி) தலைவர் மோகன்தாஸ் பய் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய சூழலால், ஐ.டி., துறையில் சாத்தியப்படாத, அதிக சம்பளம் கேட்கலாம் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக குறையும். பொதுமக்களிடமும் ஐ.டி., துறை என்றாலே அதிக ஊதியம் என்ற எண்ணம் மறையும். இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஐ.டி., நிறுவனங்கள் நடத்தும் ‘கேம்பஸ் இன்டர்வியூ‘ அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பது நிச்சயமற்றது. திடீரென்று உயர்ந்த கவர்ச்சிகரமான ஊதிய முறையால், உற்பத்தித்துறை நிறுவனங்களால் மாணவர்களை தேர்வு செய்யமுடியாத நிலை இருந்து வருகிறது. அடுத்த ஆண்டில், இந்த நிலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். ஏனென்றால், ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு சரியும், உற்பத்தித்துறையில் அதிகரிக்கும். இவ்வாறு மோகன்தாஸ் கூறினார்.