எளிமையை விரும்பியவருக்கு கிடைத்தது ‘புக்கர்’ பரிசு
மங்களூரு: கர்நாடகா, மங்களூரைச் சேர்ந்த அரவிந்த் அடிகாவிற்கு, பிரிட்டனில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த புக்கர் பரிசு கிடைத்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ரிக்சா தொழிலாளியை பற்றிய நாவலுக்காக, இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் நடந்த விழாவில் அரவிந்த் அடிகாவிற்கு 40 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அரவிந்திற்கு புக்கர் பரிசு கிடைத்திருப்பது, மங்களூரில் உள்ள அவரது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்தின் உறவினர் டாக்டர் ரகுவீர் அடிகா கூறியதாவது:அரவிந்த் தனது வாழ்வில் எளிமையை கடைபிடிப்பதை ஒரு கொள்கையாகவே கொண்டு செயல்பட்டார். அதனால் தான், அவர் எழுதிய நாவலில் ஒரு தொழிலாளியை பற்றி விரிவாக விளக்க முடிந்தது. பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்வதில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு. பல்வேறுபட்ட மக்களை அவர் சந்தித்துள்ளார். இதனால், பீகாரில் வறுமையில் வாடும் தொழிலாளியையும், பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரின் செழுமையையும் அவரால் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. இவ்வாறு ரகுவீர் கூறினார்.