எஸ்.எஸ்.ஏ., முறைகேடு? அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு
சென்னை: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பெரிய அளவிற்கு நிதி முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று கல்வித் துறையில் சந்தேகம் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் போலி பில்களை சமர்ப்பித்து ஆறு லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கணக்குகளை ஆய்வு செய்வதற்கு எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திற்கு மூன்று பேர் வீதம் நியமிக்கப்பட்டு, ஆய்வுப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 14 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் துவங்கி, பள்ளிகளில் சிறுவர்களைச் சேர்த்து பயிற்சி கொடுத்து, அவர்களை முறையான பள்ளிகளில் சேர்ப்பது வரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய பள்ளிகள் உருவாக்குதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் எஸ்.எஸ்.ஏ., நிதியில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் முதல் 1,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி வழங்குகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கென்று மாவட்டந்தோறும் தனி சி.இ.ஓ., உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அதிகாரிகளும், இதர பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி என்ற பெயரிலேயே ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை தண்ணீராக செலவழிக்கின்றனர். செயல்வழிக் கற்றல் திட்டம் (ஏ.பி.எல்.,), படைப்பாற்றல் கல்வி திட்டம் (ஏ.எல்.எம்.,), புத்தகப் பூங்கொத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எஸ்.எஸ்.ஏ., செயல்படுத்தி வருகிறது. திட்ட செயல்பாடுகளில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித புகாரும் எழாத நிலையில், தற்போது பரவலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பூதாகரமாக எழுந்துள்ளன. குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் நடந்த முறைகேடு சம்பவம் அமைந்திருக்கிறது. ‘ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்’ என்ற போர்வையில் பயிற்சி அளிக்காமலும், கூடுதலான ஆசிரியர்களைக் கணக்கு காட்டியும் ஐந்து லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டாக பங்கு போட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. போலி பில்களை சமர்ப்பித்து அவ்வளவு பணத்தையும் பாக்கெட்டில் போட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, எஸ்.எஸ்.ஏ., மாவட்ட உதவி திட்ட அலுவலர் கோவிந்தன், கண்காணிப்பாளர்கள் செல்வராஜ், கிரிநிவாஸ் மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகிய நான்கு பேரை பள்ளிக் கல்வி இயக்குனர் சஸ்பெண்ட் செய்து கடந்த வாரம் உத்தரவிட்டார். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் நிதி முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் கல்வித் துறையில் எழுந்துள்ளது. இதுகுறித்து எஸ்.எஸ்.ஏ., திட்ட கணக்கு வழக்குகளை முழுமையாக விசாரிப்பதற்கு திட்ட இயக்குனர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ்.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் நடந்த நிதி முறைகேடு எதிரொலியாக மற்ற மாவட்டங்களிலும் நடந்திருக்குமோ என்ற சந்தேகமும், அது தொடர்பாக பரவலாக புகார்களும் வருகின்றன. இதையடுத்து, எல்லா மாவட்டங்களுக்கும் தலா மூன்று அதிகாரிகளை நியமித்து, கடந்த ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை நடந்த செலவுகளுக்கு சரியான கணக்குகள் காட்டப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த மூவர் குழு, மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., அலுவலகங்களுக்குச் செல்லும். அவர்களிடம், செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சி.இ.ஓ.,க்கள் சமர்ப்பிக்க வேண்டும். மூவர் குழு அனைத்தையும் ஆய்வு செய்து, அதனடிப்படையில் திட்ட இயக்குனருக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும். தற்போது எல்லா மாவட்டங்களிலும் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. முழுமையான ஆய்வறிக்கை கிடைத்ததும் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.