திறனாளர்களை சேர்க்க இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு
இந்தியாவில் பெரும் பிரச்னையாக மாறியிருப்பது ‘பிரெய்ன் டிரெய்ன்’ எனப்படும் அறிவுச் சுரண்டல்தான். இந்தியாவில் கல்விபெறும் திறனாளர்கள் பலரும் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களிலோ, வெளிநாடுகளுக்கோ சென்றுவிடுவதால் இந்திய நிறுவனங்கள் இந்த கிரிமிலேயர் திறனாளர்களைப் பெற கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இதனால் நிறுவனத்தை நிர்வகிக்கத் திறன்பெற்ற ஊழியர்களையும் தொடர்ந்து இழந்து வந்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிர்வாகவியல் பள்ளிகளில் படித்த பலரும் சர்வதேச நிறுவனங்களான லேமென் பிரதர்ஸ், மெரிலின்ஞ் போன்ற நிறுவனங்களையே நாடிச் சென்று வந்தனர். இந்த மாபெரும் நிறுவனங்கள் சமீபத்தில் வீழ்ச்சியடைந்ததை அடுத்து இந்த மாணவர்கள் நிதி என்ற பணியைத் தாண்டி ஐ-பேங்கிங், மார்க்கெட்டிங் எச்.ஆர்., ஆகிய பிரிவுகளில் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளனர். இதனால் இந்திய நிறுவனங்கள் இவர்களைப் பணியிலமர்த்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சர்வதேச நிதி நெருக்கடி நிர்வாகவியல் மாணவர்களை அதிகம் பாதித்துள்ளபோதும் உள்நாட்டில் இவர்களுக்கு மிக நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் பணிக்காக ஏங்கிக் காத்திருப்பதைவிட ஆசியக் கண்டத்திலுள்ள நாடுகளில் பணிபுரிவதே நிர்வாகவியல் மாணவர்களுக்கு அதிக நன்மையைத் தரும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். எப்படியோ, இனி இந்திய நிறுவனங்களை நிர்வகிக்க செயல்திறம்மிக்க திறனாளர்கள் நிறைய கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை தரும் செய்தியாக உள்ளது.