உள்ளூர் செய்திகள்

தமிழ் மொழியின் கட்டுமானத்துக்கு சேதாரம் ஏற்படவில்லை

தொல்லியல் துறையின் சார்பில், ஒவ்வொரு மாதமும், "திங்கள் பொழிவு" என்ற பெயரில், தொல்லியல் தொடர்பான கருத்தரங்கம் நடப்பது, வழக்கம். இந்த மாதம், "சுவடிக் கலையும், யாப்புக் கலையும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சென்னை பல்கலை கழக, தமிழ் இலக்கிய துறை பேராசிரியர், மணிகண்டன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொல்லியல் துறை பொறுப்பு ஆணையர், வசந்தி முன்னிலை வகித்தார். விழாவில், மணிகண்டன் பேசியதாவது: சங்க இலக்கியங்களே, தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதற்கு, உறுதுணையாக இருந்தன. இலக்கண மரபு என்பதை தாண்டி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தமிழர்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், சங்க இலக்கியங்களே உலகுக்கு காட்டின. முதுபெரும் ஆய்வாளர், ஏ.கே.ராமானுஜம், "1880, அக்டோபர், 2 தேதி"யை, தமிழர்கள் அனைவரும் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தன் நூலில் குறிப்பிட்டார். அந்நாளில், திருவாவாடு துறை ஆதீனத்தில், வித்வானாக பணிபுரிந்த, உ.வே.சா., சேலம் ராமசாமி முதலியாரை சந்தித்தார். அதன் மூலமாகவே, தமிழ் இலக்கிய உலகத்துக்கு, சங்க இலக்கியங்கள் கிடைத்தன. உ.வே.சா.,வை தவிர்த்து வேறு யாரேனும், சங்க இலக்கியங்களை பதிப்பித்திருக்க முடியாது. பத்துப்பாட்டில் உள்ள, குறிஞ்சிப்பாட்டில் கபிலர், 100 மலர்களின் பெயர்களை எழுதினார். உ.வே.சா., பதிப்பிக்கும் போது, அப்பகுதி மட்டும் கிடைக்கவில்லை. உலகத்தின் பல நாடுகளில், தேடியும் கிடைக்காத குறிஞ்சிப்பாட்டின் குறிப்பிட்ட பகுதி, தர்மபுரம் ஆதீனத்தில் இருந்தது. திருவாவடு துறை ஆதீனத்தில் : திருவாவடு துறை ஆதீனத்தில் பணிபுரிந்த, உ.வே.சா., தருமபுரம் ஆதீனத்தில், பணிவுடன் பெற்ற அந்த பாட்டால், தமிழ் இலக்கியம் இன்று நிமிர்ந்து நிற்கிறது. சுவடியை பொறுத்தமட்டில், எழுத்தமைப்பு, பொருள் உணர்ச்சி, இலக்கிய வகை அறிவு, யாப்பு வடிவ அமைப்பு போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அறிவு இருக்கும் பட்சத்தில், இடைச்செருகலை, எளிதில் கண்டுபிடிக்க முடியும். விடுபட்ட வாக்கியங்களில், எந்த வார்த்தை இருந்தது என்பதை யூகிக்க முடியும். அதற்கான பொருளை உணர்ந்து கொள்ள முடியும். பதிப்பித்தவர்கள், யாப்பு தெரியாததால், இலக்கிய வகைகளை மாற்றினர். தமிழ் இலக்கியத்தில் அனைத்து புத்தகங்களையும், 100 சதவீதம் முழுமையாக பதிப்பித்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால், 90 சதவீத புத்தகங்களை, பிழையுடனே பதிப்பித்துள்ளோம். பதிப்பித்தவர்களுக்கு, யாப்பு தெரியாததால் இத்தவறு நிகழ்ந்தது. திருக்குறளில் பல அடிகள், தவறாகவே பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஜி.யூ.போப் பதிப்பித்த நூலிலும், இத்தவறை காண முடியும். "தமிழ் மொழி, இன்னும், 100 ஆண்டுகளில் அழிந்து விடும்" என, பலரும் கூறி வருகின்றனர். தமிழ் மொழியின் அடிப்படை கட்டுமானத்தில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை. தொல்காப்பியத்தில், குறில் எழுத்துக்கு பின், "ர், ழ்" என்ற இரு எழுத்துக்களும் வராது என குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், அது போன்ற வார்த்தைகள் தமிழில் உருவாகவில்லை. இதுவே, தமிழின் அடிப்படை கட்டுமானம் சிதையவில்லை என்பதற்கு, உதாரணம். எனவே. தமிழை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்