உள்ளூர் செய்திகள்

பள்ளியின் அலட்சியமே சிறுவன் கடத்தலுக்கு காரணம்

சென்னை, எண்ணூர் துறைமுக உதவி மேலாளர் ஹரிஹரன் மகன், மூன்றரை வயது சிறுவன் சூர்யா, கடந்த இரு தினங்களுக்கு முன், ராஜா அண்ணாமலை நகரில், அவன் படித்த பள்ளியில் இருந்து கடத்தப்பட்டான். நான்கு மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசார், இதுதொடர்பாக, ஒருவனை கைது செய்தனர். தொடர்ந்து, நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், சிறுவன் சூர்யா கடத்தப்பட்ட விதம் குறித்தும், சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறித்தும், கிழக்கு மண்டல இணை கமிஷனர் சங்கர் கூறியதாவது: இந்த சம்பவத்தில், பிரபு, செந்தில், கதிரவன், சந்துரு மற்றும் சுபாஷ் ஆகிய ஐந்து பேர் ஈடுபட்டனர். இதில் கதிரவன் தவிர்த்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் செய்த வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால், பணத்தேவை ஏற்பட்டு, கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி வேன் டிரைவரான பிரபு, பள்ளிக்கு அழைத்துச் செல்லும் குழந்தைகளில், சூர்யா தான் இளையவன். அதனால், இவர்களது குறி, சூர்யா மேல் திரும்பியுள்ளது. தொடர்ந்து, இவர்கள் ஐவரும், சூர்யாவை கடத்த திட்டமிட்டனர். பள்ளி முடிந்த பிறகு, 11:40 மணிக்கு, கடத்தல் கும்பலில் ஒருவரான கதிரவன், பள்ளிக்குச் சென்று, சிறுவன் சூர்யாவின் வேன் டிரைவர் போல் வெளியில் அழைத்து வந்துள்ளார். பின் சூர்யாவை, இருசக்கர வாகனத்தில் வைத்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், வழக்கமாக சூர்யாவை பள்ளிக்கு அழைத்து வரும் டிரைவர், ராஜு பள்ளிக்கு வந்து குழந்தையை தேடியபோது தான், பள்ளி நிர்வாகத்திற்கு சூர்யா கடத்தப்பட்டது தெரிந்தது. பள்ளி நிர்வாகம், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து, நண்பகல், 1:30க்கு, இரண்டு மணிநேரம் தாமதமாக, கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தந்தனர். நாங்கள் உடனே ஹரிஹரனை தொடர்பு கொண்ட போது, அவர் குழந்தையை மீட்க, கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இடமான தண்டையார்பேட்டைக்கு, பணம் இல்லாததால், வீட்டில் இருந்த தங்க நகைகளுடன் சென்று கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், போலீஸ் தலையீட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி, ஹரிஹரனை அவரது போக்கில் விட்டோம். குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட பின், எங்களது விசாரணை முழு வீச்சில் துவங்கியது. இச்சம்பவம் நடந்து, 12 முதல் 24 மணிநேரத்தில், ஐந்து பேரில், நால்வரை கைது செய்துள்ளோம். இவர்களிடமிருந்து, கடத்தலுக்காக பெறப்பட்ட, 79 கிராம் தங்க நகைகள் மற்றும் நகைகளை அடகு வைத்து பெற்ற, 2 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுள்ளோம். மேலும், கடத்தலுக்கு ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றியுள்ளோம். பள்ளிக்கு சென்று, சிறுவனை கடத்திய, கதிரவனை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார். சிறுவன் சூர்யா கடத்தப்பட்ட விவகாரத்தில், சிறுவன் படித்த பள்ளியில், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அலட்சியப் போக்கே, கடத்தல் சுலபமாக நடக்க வழி வகுத்துள்ளது. ஏனென்றால், முகம் தெரியாத ஒருவர் சுலபமாக பள்ளியின் உள் சென்று, ஒரு குழந்தையை, எந்தவித கேள்வியும் இன்றி வெளியில் அழைத்து வருகிறார்.இதிலிருந்தே பள்ளியில், குழந்தைகளுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை எனத் தெரிகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதும் சரி, பள்ளி முடிந்து குழந்தைகள் வீட்டிற்குச் செல்லும் போதும் சரி, அவர்கள் சரியானவர்களுடன் செல்கின்றனரா என்பதை, பள்ளி நிர்வாகம் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இதற்கான கட்டமைப்பை பள்ளிகள் உருவாக்கவேண்டும். இதில் குறைபாடுகள் இருந்தால், அந்த பள்ளி நிர்வாகமே, நடக்கும் சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, இணை கமிஷனர் சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்