உள்ளூர் செய்திகள்

தொழிற்கல்வி பாடப்பிரிவு மீண்டும் துவக்க உத்தரவு

பெரம்பலூர்: குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மீண்டும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்க, பெரம்பலூர் கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் குரும்பலூர், பாளையம், திருப்பெயர், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கடந்த, 15 ஆண்டுகளாக தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயின்று வந்தனர். இந்நிலையில் தொழிற்கல்விக்கு, 2013-14ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதையறிந்த மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, ஆசிரியர் மற்றும் இடம் பற்றாக்குறை, பாடப்பிரிவிற்கு அனுமதி மற்றும் அரசு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால், தொழிற்கல்விக்கான சேர்க்கை இல்லை எனக்கூறியுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியில் பயின்று தொழிற்கல்வியில் சேர முடியாத 21 மாணவர்கள், கடந்த மாதம் 28ம் தேதி பெரம்பலூர் சி.இ.ஓ., மகாலிங்கத்திடம், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மா.கம்யூ., கட்சியின் பெரம்பலூர் மாவட்டக்குழு உறுப்பினர் ரமேஷ், நேற்று பெரம்பலூர் கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன், சி.இ.ஓ., மகாலிங்கம் ஆகியோரை சந்தித்து, புகார் மனு அளித்ததை தொடர்ந்து கிராமப்புற மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை துவங்க வேண்டுமென கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்