கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு நடத்தி மோசடி
ஊட்டி: போலியாக "கேம்பஸ் இன்டர்வியூ" நடத்தி மோசடி செய்தவர் ஊட்டி கல்லூரியிலும் ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பல கல்லூரிகளில் "கார்ப்பரேட் கம்பெனி"களின் பெயரில் போலியாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி மோசடி செய்ததாக சென்னை போலீசாருக்கு புகார் வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்த சையது சலாவுதீன் 38, என்பவரை கைது செய்து விசாரித்ததில் பல கல்லூரிகளில் 1.50 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சையது சலாவுதீன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரியிலும் போலி கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி மோசடி செய்யப்பட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் வந்தது. இதனடிப்படையில், சென்னையில் கைதான சையது சலாவுதீனை நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், கேத்தி கல்லூரியிலும் 1.50 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சையது சலாவுதீன் மீது தனி வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை புழல் சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், "வேலூரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திய சலாவுதீன், வட மாநில இளைஞர்கள் ஒன்பது பேருடன் சேர்ந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி மோசடி செய்துள்ளார். வட மாநில இளைஞர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர்" என்றனர்.