விடுதியில் சேர்த்துக்கொள்ள மாணவியர் கோரிக்கை மனு
சேலம்: கெங்கவல்லி தாலுகா நரிப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் நதியா, 12, அஜீதா, 12, சவுந்தர்யா, 12, பிரீத்தி, 11. இவர்கள் ஹிந்து மலையாளி வகுப்பை சேர்ந்தவர்கள். ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நதியா, அஜிதா, சவுந்தர்யா ஆகியோர் ஏழாம் வகுப்பும், பிரீத்தி ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆத்தூர் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. நேரடி பஸ் போக்குவரத்து வசதியில்லை. மாணவியர் தினமும் 12 கி.மீ. தூரம் நடந்து கூடமலைக்கு வந்து அங்கிருந்து பஸ் பிடித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நதியா, அஜீதா, சவுந்தர்யா ஆகிய மூன்று பேரும் ஆத்தூரில் அரசு மகளிர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி பயில்வதற்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் விடுதியில் இவர்கள் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. நேற்று மாணவியர் நான்கு பேரும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விடுதியில் தங்கி பயில்வதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.