உள்ளூர் செய்திகள்

அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முற்றுகை

போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு புதிதாக கட்டப்பட்டு வரும் போடி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடியும் வரை தற்காலிகமாக சில்லமரத்துப்பட்டி கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் 800க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். மாணவ மாணவிகளுக்கு தேவையான குடிநீர், சுகாதார வளாகம், ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட நிர்வாத்திடம் கல்லூரி மாணவர்கள் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இந்த ஆண்டு புதிதாக முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் சேர்க்கையையொட்டி வகுப்பறைகள், விடுதி வசதியின்றி மேலும் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே அரசு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், புதிதாக கட்டப்படும் பொறியியல் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், புதிய அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போடி தாலுகா இன்ஸ்பெக்டர் கென்னடி, தாசில்தார் பழனிக்குமார், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரி கட்டடப் பணிகள் விரைந்து முடிக்கவும், அதுவரை மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்