சிவில் சர்வீஸ் தேர்வு விபரங்கள் அறிவிப்பு
மதுரை: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) இந்திய ஆட்சிப் பணிக்கான அதிகாரிகளை தேர்வு செய்கிறது. இதற்காக முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலை தேர்வில், தாள் 1ல், பொது அறிவு வினாக்களும், தாள் 2ல், ஆப்டிடியூட் வினாக்களும் இடம்பெறும். 2014ம் ஆண்டுக்கான தேர்வு வரும் 24ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே முதல்நிலை தேர்வின் தாள் 2ல், அப்ஜெக்டிவ் டைப் வினாக்களில் 8 ஆங்கில வினாக்கள் கடினமாக உள்ளதாகக் கூறி, அவை தேவையில்லை என இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்திய அரசு அந்த வினாக்களுக்கான மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது என அறிவித்தது. இருப்பினும் தேர்வுக்கான வினாத்தாள் அச்சிடப்பட்டு விட்டதால், வழக்கம்போல தேர்வு நடத்தப்பட உள்ளது. இருப்பினும், தேர்வு கூடத்தில் அந்த வினாக்களை பொருட்படுத்த தேவையில்லை என அறிவுறுத்துதல் வழங்குவர். இரண்டு மணி நேரம் நடத்தப்படும் இத்தேர்வில் ஆங்கில நுண்ணறிவு வினாக்கள் 8க்கும், தலா இரண்டரை மதிப்பெண் வீதம், 20 மதிப்பெண்கள் உள்ளன. இவை தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. அடுத்த ஆண்டு தேர்வின்போது, மேற்கண்ட 8 வினாக்களுக்கான மதிப்பெண்கள் வேறு பிரிவுகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இதற்கிடையே, 2015ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வுக்கான அட்டவணையையும் யு.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஆக. 23ம் தேதி தேர்வு நடைபெறும். இதற்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 11 விண்ணப்பிக்க கடைசிநாள் என அறிவித்துள்ளனர்.