மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க கலெக்டர் வலியுறுத்தல்
மதுரை: ”மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும்,” என கலெக்டர் சுப்ரமணியன் குறிப்பிட்டார். மதுரை மாவட்ட பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். 120க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, மின்சிக்கனம், விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல், சூரியஒளி மின்சாரம் போன்ற படைப்புகளை மாணவர்கள் வைத்திருந்தனர். கண்காட்சியை கலெக்டர் சுப்ரமணியன் திறந்து பேசியதாவது: கண்காட்சி மூலம் மாணவர்களிடம் ஒளிந்துள்ள திறமைகளை வெளிக்கொணர முடிகிறது. இளம் சிறார்களின் கருத்துக்களையும் ஆசிரியர்கள் அக்கறையுடன் கேட்டு ஆலோசனை கூறினால் சிறப்பானவர்களாக பரிணமிப்பர். மாணவர்கள் கல்விசார்ந்த பிற நடவடிக்கைகளிலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அந்த சொத்தை வழங்குவது ஆசிரியர்களின் கடமை, என்றார்.