‘மாநிலம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்குமா?’
திருப்பூர்: ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் வாய்ப்பு கிடைக்குமா என திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்க்கின்றனர். திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு வகையான ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்களில், படித்த, படிக்காதவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்குமான வேலைவாய்ப்புகள் உள்ளன.‘மெஷின் ஆபரேட்டர்’, ‘டெய்லர்’, ‘ஹெல்பர்’, ‘சூபர்வைசர்’ போன்ற தொழிலாளர் பணியிடங்கள், ‘மெர்ச்சண்டைசர்’, கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் போன்ற நிர்வாக அளவிலான பணியிடங்களும் உள்ளன. வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் திருப்பூரை நோக்கி, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஆடை உற்பத்திக்கு ஏராளமான ஆர்டர்கள் வருகின்றன. எல்லா வகையிலும் சாதகமான சூழல் நிலவியும் கூட, பல பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையால் தவிக்கின்றன. பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அனுப்பியும், வேலைவாய்ப்பு முகாம் நடத்தியும், தொழிலாளர்களை அழைத்து வர முயற்சிக்கின்றனர். ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் படித்த, படிக்காத வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, காங்கயம், தாராபுரம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தி, 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பின்னலாடை நிறுவனங்களில் உள்ள காலி பணியிட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நிறுவனங்களில் உள்ள பதவி பெயர், மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை; தேவைப்படும் கல்வித்தகுதி, நிறுவனத்தில் தங்கிபணிபுரியும் வசதி உள்ளதா; வழங்கப்படும் சராசரி ஊதியம் போன்ற தகவல் பெறும் வகையில், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. பின்னலாடை நிறுவனங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றன. இதுதொடர்பாக, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாலை 4:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க, பின்னலாடை நிறுவனங்களின் மனித வள மேலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப, வேலைவாய்ப்பு முகாம் தேதி இறுதி செய்ய உள்ளதாக, ஊரக வாழ்வாதார இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னலாடை துறையினரிடம் கேட்டபோது, ‘முகாம் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் தேவை; ஆனால், 5,000 என்ற இலக்கு மிக மிக சாதாரணம். திருப்பூர், அரியலூர் மாவட்ட நிர்வாகங்கள், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, பின்னலாடை துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதேபோல், பிற மாவட்ட நிர்வாகங்களும் திருப்பூருக்கு அழைப்பு விடுத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்,’ என்றனர்.