உள்ளூர் செய்திகள்

கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்புவது தொடர்கிறது

மதுரை: மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்கள் தப்பிச் செல்வது தொடர் கதையாகிறது. மூன்று மாதங்களில் 28 பேர் தப்பியுள்ளனர். மதுரை பாலர் உதவி சங்கத்தின்கீழ் இயங்கும் இந்த இல்லத்தில் அரசு சார்பில் 4 வாட்ச்மேன், 2 சமையல் ஊழியர்கள், 2 உதவியாளர்கள், டைப்பிஸ்ட், மேட்ரன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டம் மூலம் கண்காணிப்பாளர், பாரா மெடிக்கல் அலுவலர், நற்பண்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் என பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 50 சதவீத ஊழியர்கள் இல்லை. இங்கிருந்து கடந்த அக்.4ல் ஏழு பேர், ஜன.2ல் 10 பேர், பிப். 12ல் இருவர், பிப். 13ல் 9 பேர் என 28 பேர் தப்பியுள்ளனர். சம்பளம் பெறாத ஊழியர் சம்பளம் வழங்காதது, கூடுதல் பணிச்சுமை போன்ற காரணங்களால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். தப்புவதற்கு வசதியாக குடியிருப்போர் பகுதிக்கான சுற்றுச்சுவர், அதனருகே தண்ணீர் தொட்டி உள்ளது. இவ்வழியை பயன்படுத்தியே ஒவ்வொரு முறையும் சிறுவர்கள் தப்பி செல்வது வழக்கமாக உள்ளது. போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்லும் அளவுக்கு சிறுவர்களின் செயல்பாடு இருப்பது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சட்ட விதிகள் சிறுவர்களுக்கு வசதியாக உள்ளதால் அவர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். நல்வழிப்படுத்துவதற்காகவே இதுபோன்ற கூர்நோக்கு இல்லங்கள் உள்ளன. சமீபகாலமாக சிறுவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, வன்முறைகளை ஊக்குவிக்கும் இடமாக மாறிவருகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வுகாண நீதித்துறை, போலீஸ், மாவட்ட நிர்வாகம், பாலர் உதவிச்சங்கம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்