நிதி தந்த மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
கோவை: பள்ளி வேலை நேரத்தில், பள்ளிக்கு செல்லாமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் திரட்டிய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். கலெக்டர் காந்தி மாநகர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், அப்பகுதியில் நிதி திரட்டியதோடு, அதை கலெக்டரிடம் சமர்ப்பிக்க, பள்ளிச்சீருடையில், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து நிதி வழங்கினர். மாணவர்களின் மனித நேயத்தை பாராட்டிய கலெக்டர், பள்ளிநேரத்தில், பள்ளியை விட்டு எப்படி வெளியேறினீர்கள்? யார் அனுமதி அளித்தது?எனக் கேட்டார். இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில் எக்காரணம் கொண்டும், மாணவர்கள் வெளியேறக்கூடாது. அப்படியே வெளியே செல்ல வேண்டிய காரணம் இருந்தால், பெற்றோர் மற்றும் ஆசிரியர் அனுமதியின்றி வெளியேறக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.