உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி; மாணவர்களுக்கு கவுரவம்

ஏழ்மை நிலையிலும் குத்துச்சண்டை போட்டியில், தேசிய அளவில் தங்கம் வென்ற, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவன் மற்றும் மாணவியை, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி கவுரவித்தது. சென்னை எருக்கஞ்சேரி மாநகராட்சி பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி அமலா. இவர் தன் தந்தை வழிப்பாட்டி சுசிலாவின் வளர்ப்பில் பல சாதனைகளை பெற்று வருகிறார். ஐந்து வயதில், டேக் வாண்டோ கற்றுக்கொள்ள விரும்பிய அமலா, படிப்படியாக முன்னேறி, தற்போது, வங்க தேசத்தில் நடக்கவுள்ள சர்வதேச தாய் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன், மத்திய பிரதேசத்தில் நடந்த, 15 முதல் 17 வயதுக்குள்ளானோரின் பிரிவில், தேசிய தாய் குத்துச்சண்டை போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.இவரது தம்பி அர்ஜுனா, அதே மாநகராட்சி பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறான். இவனும் மத்திய பிரதேசத்தில் நடந்த போட்டியில் தேசிய அளவில், 11 வயதுக்கான பிரிவில், தேசிய அளவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளான். இவர்களை, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி மூலம், தினமலர் நாளிதழ் மேடைக்கு அழைத்து, அவர்களின் சாதனைகளை, மற்ற மாணவர்களுக்கு உந்து சக்தியாக வழி காட்டியது. சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டன. மாணவி அமலா கூறுகையில், சர்வதேச அளவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல இலக்கு வைத்துள்ளேன். அதேநேரம், நன்றாக படித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவே லட்சியம் கொண்டுள்ளேன். அதற்கு தனது தந்தை வழிப்பாட்டி சுசிலா உறுதுணையாக இருக்கிறார்,என்றார். மாணவி அமலாவை வழி நடத்தும் சித்தப்பா கணேசன் கூறுகையில், என் அண்ணன் மகளான அமலாவை, அவரது பெற்றோர் இருந்தாலும், அவரது பாட்டி சுசிலா சிறுவயது முதல் கவனித்து, வளர்ப்புத் தாயாக இருந்து, சாதனைகள் செய்ய துாண்டுகோலாய் உள்ளார், என்றார்.  மாணவியின் பாட்டி சுசிலா கூறுகையில், நான் மகள் போல் நினைக்கும் பேத்தியை, ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்க செய்வேன், என்றார். விளையாட்டில் சாதனை படைக்கும் அமலா படிப்பிலும், சிறந்த மாணவியாக திகழ்வதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதேநேரம், தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு செல்ல, போக்குவரத்து வசதிக்கே திணறும் ஏழ்மையான சூழலில், இந்த மாணவியும், அவரது குடும்பமும் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்