உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியையொட்டி மாதிரி பள்ளி; மாணவர்கள் அவதி

சூளகிரி: சூளகிரி அடுத்த பேடப்பள்ளி அரசு மாதிரி பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், மாணவ, மாணவியர் அவதியடைந்து வருகின்றனர். ஓசூர் அடுத்த சூளகிரியில், 2008ம் ஆண்டு அரசு மாதிரி பள்ளி துவங்கப்பட்டது. சொந்த கட்டடம் இல்லாததால், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாதிரி பள்ளி மாணவ, மாணவியர் படித்து வந்தனர். இதற்கிடையே சூளகிரி அடுத்த பேடப்பள்ளியில், 3 கோடி ரூபாய் மதிப்பில் மாதிரி பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டது. இதை கடந்த, 28ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பேடப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி பள்ளிக்கு, மாணவ, மாணவியர் செல்ல வேண்டுமானால், சூளகிரி, அழகுபாவி, சென்னப்பள்ளி, சின்னாறு, பலவதிம்மனப்பள்ளி வழியாக தான் சென்றாக வேண்டும். ஆனால் சின்னாறு வரை மட்டுமே பஸ் வசதி உள்ளது. இதனால் சூளகிரி, மாரண்டப்பள்ளி, மைதாண்டப்பள்ளி, சிகரலப்பள்ளி உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும், 387 மாணவ, மாணவியர், இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், வனப்பகுதியையொட்டி பள்ளி அமைந்துள்ளதால், நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால், வனவிலங்குகள் புகுந்து விடும் ஆபத்து உள்ளது. எனவே, பேடப்பள்ளி மாதிரி பள்ளிக்கு பஸ் வசதி செய்து கொடுப்பதோடு, குடிநீர், காம்பவுண்ட் சுவர் உட்பட, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்