மாணவரின் கற்றல் அடைவு திறன் சோதனை!
நாமக்கல்: மாணவர்களின் கற்றல் அடைவு திறனை கண்டறியும் வகையில், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், கற்றல் அடைவு சோதனை, நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. அவற்றை பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான (2015-16), மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டை அளவிடும் வகையில், அரசு, நகராட்சி, நலத்துறை, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 3, 5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவு சோதனை, நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் துவங்கியது. ஒவ்வொரு யூனியனிலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், 3 மற்றும் 5ம் வகுப்புகளில், 10 மாணவர்களுக்கு, 10 பள்ளிகளிலும், 15 மாணவர்களுக்கு, ஆறு பள்ளிகளிலும் என, மொத்தம், 16 பள்ளிகள் மற்றும் ஆங்கில வழியிலும் (3ம் வகுப்பு மட்டும்) என, மொத்தம், 17 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் கற்றல் அடைவு சோதனை நடக்கிறது. அதேபோல், 8ம் வகுப்புக்கு, 10 பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடைவுச் சோதனை தனித்தனியே நடக்கிறது. நேற்று முன்தினம், 3 மற்றும் 5ம் வகுப்புக்கு, தமிழ், கணிதமும், நேற்று, ஆங்கிலத்தேர்வு நடந்தது. இன்று (ஜன., 7) எட்டாம் வகுப்புக்கு, காலை, 10 மணிக்கு, தமிழ், மதியம், 2 மணிக்கு, கணிதம் தேர்வும், நாளை (ஜன., 8), எட்டாம் வகுப்புக்கு, காலை, 10 மணிக்கு, ஆங்கிலம், மதியம், 2 மணிக்கு, அறிவியல் தேர்வும் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் நடந்த இந்த தேர்வை, மாநில கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் குப்புசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) அல்லிமுத்து ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.