தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டம்!
நான்காம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியரின் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள, வாசித்தலே எல்லை என்ற திட்டத்துக்கான ஆய்வு பணிகள், பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையில், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்0பு கல்வியாண்டில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தமிழ் மொழி வாசிப்பு திறனை மேம்படுத்த, வாசித்தலே எல்லை என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துவக்க, நடுநிலை பள்ளிகளில் நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் செயல்படுத்தலாம். இதற்காக, பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. விண்ணப்பித்த பள்ளிகளில், குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் அனைத்து மாணவர்களும் தமிழில் முழுமையாக வாசிக்கும் பட்சத்தில், அப்பள்ளிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் மாணவர்களிடம் செய்தி தாள் அல்லது வேறு புத்தகங்கள் வழங்கி, வாசிப்பு திறன் பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில், 6, 653 பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. தற்போது, பள்ளிகளில் ஆய்வுப்பணிகள் தொடங்கியுள்ளது. இப்பணிகளை ஜனவரி மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.