மாற்றுத்திறனாளி மாணவர் ஆசிரியர் உதவியுடன் தேர்வு
நல்லிபாளையம்: பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர், கற்றல் குறைபாடு உள்ள மற்றொரு மாணவர் என, இருவரும், ஆசிரியர் உதவியுடன் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். நாமக்கல் நகராட்சி, ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த விஜயகுமார், மாதேஸ்வரி தம்பதியரின் மகன் தயாநிதி, 15. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார். நேற்று துவங்கிய எஸ்.எஸ்.எல்.சி., அரசு பொதுத்தேர்வில், அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. அதன்படி, கேள்விகளை ஆசிரியர் கேட்டபின், அதற்குரிய பதிலை மாணவர் கூறினார். அதை அந்த ஆசிரியர் மாணவரின் விடைத்தாளில் எழுதினார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வளர்மதி, நாமக்கல்லில் வசிக்கிறார். அவரது மகன் நரேந்திர சிவா, 15. நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறார். கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) காரணமாக, கைகள் நடுக்கம் ஏற்படுவதுடன், பேலன்ஸ் இல்லாமல் உள்ளார். மேலும், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளும் தேர்வை எழுத முடியாது. அவரும் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்.