பொதுத்துறை வங்குகள் அறிவிக்கும் புதிய வேலைகள்
பொருளாதார மந்த நிலையால் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே தடுமாறிக் கொண்டிருக்கையில் இந்திய பொதுத் துறை பாங்குகள் மட்டும் புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்து வருகின்றன. தினசரி 100 புதிய வாய்ப்புகள் இவற்றில் நிரப்பப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் பொதுத் துறை பாங்குகளில் 34 ஆயிரம் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ஸ்டேட் பாங்க் மட்டுமே 15 ஆயிரம் வேலைகளை அறிவிக்கவுள்ளது. சமீபத்தில் தான் கனரா பாங்க் ஆயிரம் அதிகாரிகளையும் 800 கிளார்க்குகளையும் பணிக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பாங்க் ஆப் இந்தியா 550 கிளார்க்குகளையும் 500 அதிகாரிகளையும் பணி நியமனம் செய்துள்ளது. 237 சிறப்பு அதிகாரி பணியிடங்களும் இந்த வங்கியால் நிரப்பப்பட்டுள்ளன. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 2 ஆயிரம் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டிலும் இந்த வங்கி 2 ஆயிரம் பேரை பணிக்கு எடுத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இளைஞர்களுக்கு இது நல்ல செய்தி என்பதில் சந்தேகமில்லை.