அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு துவங்கியது பயிற்சி
அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்கள், பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். மொத்த தேர்ச்சி சதவீதம் 20 க்கு கீழ் உள்ள பள்ளிகளும் பட்டியலில் உள்ளன.தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த வேலை நாட்கள், அதிக சுதந்திரம், அதிக சம்பளம் போன்ற வசதிகள் இருந்தாலும், பொதுத் தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகளே தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. இதனால், நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாநிலத்தின் சில மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகமாகவே உள்ளது. இருப்பினும், கூடுதல் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் நடவடிக்கைகளில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை இறங்கியுள்ளது. ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இப்பயிற்சி முகாம் துவங்கியது.பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நேற்று ஆங்கில பாடம் பற்றியும், பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு கணித பாடம் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதே ரீதியில் வரும் 5ம் தேதி வரை அனைத்து பாடங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கோவை மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சிப்பள்ளி என, கல்வி மாவட்டத்துக்கு 120 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது; இந்த முகாமில் 1,000 ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர். ஏறத்தாழ 25 ஆண்டு அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தங்கள் பாடங்களில் 100 சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்கள், பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பாடம் நடத்தும் முறை, படிப்பில் பலவீனமாக உள்ள மாணவனை தேர்ச்சி பெறச் செய்யும் யுக்தி உள்ளிட்ட பல தகவல்கள் பயிற்சியில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இப்பயிற்சியின் வாயிலாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, சுபாஷினி தெரிவித்தார்.