துணைவேந்தர் நியமனம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவியில் சுரப்பா நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துணைவேந்தர் பதவியில் சுரப்பா நீடிப்பதை எதிர்த்து, சமூக ஆர்வலர் &'டிராபிக்&' ராமசாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.மனுவில், &'ஐ.ஐ.டி.,யில் இயக்குனராக, ஆறு ஆண்டுகள் சுரப்பா பதவி வகித்துள்ளார்; இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின், &'டீன்&' ஆகவும் பதவி வகித்துள்ளார். &'பல்கலை மானியக் குழு விதிகளின்படி, இரு முறைக்கு மேல் ஒருவர், துணைவேந்தராக இருக்க முடியாது. ஐ.ஐ.டி., இயக்குனர் பதவி, துணைவேந்தர் பதவிக்கு இணையானது என்பதால், மீண்டும் நியமித்தது விதிகளுக்கு எதிரானது&' என, கூறப்பட்டது.இம்மனுவை விசாரித்தஉயர் நீதிமன்றம், எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கூடுதல் ஆவணங்களுடன், மீண்டும் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார். மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் பொது நலன் இருப்பதாக தெரியவில்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.