ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் குவிந்த மாணவர்கள்
சென்னை: ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக, பலத்த மழை பெய்த போதும் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்தே மாணவ, மாணவியர், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கை நிரப்பினர். தேர்வை எதிர்கொள்ள, பாடங்களுக்கான மதிப்பெண் விவரம், எந்தப் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ‘புளூ பிரின்ட்’ புத்தகம், குறிப்பு எடுப்பதற்கான நோட்டு புத்தகம் ஆகியவை அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. மழை மற்றும் புயல் எச்சரிக்கையை பொருட்படுத்தாது, ஆயிரக்கணக்கில் வந்த அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, காலை 9 மணிக்கு துவங்கிய ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், கணிதப் பாடத்தை பத்மநாபனும், வேதியியல் பாடத்தை பாலசுப்ரமணியனும், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை சேகரும், இயற்பியல் பாடத்தை கோபி ஆனந்தனும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை ரமேஷும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, மதியம் கலைப்பிரிவினருக்கான பாடங்கள் எடுக்கப்பட்டன. இதில் வணிகவியல் பாடத்தை சீனிவாசனும், பொருளியியல் பாடத்தை ரவியும் எடுக்க, நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு முடிந்தது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் போது, ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல மாணவ, மாணவியர் மீண்டும் நேற்று ‘பிளஸ் 2’ தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வந்திருந்தனர். மாணவர்களுடன் சேர்ந்து பல பெற்றோர்களும் குறிப்பெடுத்தனர்.