மாணவர் எண்ணிக்கை மட்டும் உயர்ந்தால் போதுமா?
மற்றொருபுறம் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. உதாரணமாக, கடந்தாண்டு 9 சதவீத உயர்வுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றுள்ளனர். இதன்மூலம், அமெரிக்கா செல்லும் சர்வதேச மாணவர்களில் இந்தியா எட்டாவது ஆண்டாக, தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. அதேநேரம், தமிழக அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், முன்பு 20 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தநிலையில், இந்தாண்டில் ஏராளமான புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டும், 7 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் இருந்தன. இது இன்றைய இளைய தலைமுறையினரிடையே உயர் கல்வி மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. எனினும், கல்வித் துறையில் இன்னும் எட்டவேண்டிய இலக்குகள் ஏராளம். அடிப்படையில் மாணவர் சேர்க்கை மட்டும் அதிகரிப்பதில் முழுமையான பயனில்லை. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி அளிக்கப்பட வேண்டியது நாட்டின் தேவை. அதற்கு உரிய கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க ஆசிரியர்களும் அவசியம். இவற்றை ஒப்பிட்டு பார்க்கையில், நமது நாட்டின் கல்வி நிலை எந்தளவிற்கு உள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நூற்றுக்கணக்கான புதிய கல்லூரிகள் துவக்கப்படுகிறபோதிலும், அவற்றில் போதிய தகுதியுடைய ஆசிரியர்கள் இல்லை என்பதை கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சார முறை என்பது வெறும் சொல்லோடு நின்று, இன்று பி.இ., படித்தவர்களே பி.இ., படித்தவர்களுக்கு வகுப்பெடுக்கும் நிலை பல கல்லூரிகளில் காணப்படுகிறது. இனி இந்த நிலை ஓரளவு மாறும் என்றும் சில கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ‘சமீபத்திய உலகப் பொருளாதார மந்தநிலை ஒருவிதத்தில் கல்வித் துறைக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது. படிப்பில் சிறந்த மாணவர்களை கல்லூரி நேர்காணல் மூலமாகவே, அதிக சம்பளம் வழங்கி ஐ.டி., நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொண்டன. இதனால், முதுநிலை, ஆராய்ச்சி கல்வியில் மாணவர்களின் ஆர்வம் மேலும் குறைந்தது. ஆனால் தற்போதைய, உலகப் பொருளாதார மந்தநிலையால், ஐ.டி., மோகம் ஓரளவு குறைந்துள்ளது. அதோடு, கல்லூரி ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இளைய தலைமுறையினரை ஆசிரியர் பணிக்கு வெகுவாக கவர்ந்திழுக்கத் துவங்கியுள்ளது. எனவே, இனி கல்வியில் சிறந்த மாணவர்களும் கல்விப் பணியாற்ற வருவார்கள் என்று நம்பலாம். எனினும் ஆசிரியர் பணியில் உள்ள அனைவரும் இத்துறையை ஒரு சேவையாக கருதி செயல்பட வேண்டும். விஞ்ஞானி, குடியரசுத் தலைவர் என எத்தனை பொறுப்புகளில் இருந்தபோதிலும், அப்துல் கலாம் ஆசிரியர் பணியை அவர் மிகவும் நேசித்தார்’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் (நுழைவுத் தேர்வு) நவநீதகிருஷ்ணன். ‘பிஎச்.டி., படிப்பில் அனைத்து தரப்பு மாணவர்களும் சேர்க்கை பெறும் வகையில், இளநிலை படிப்பைப் போன்று ஜாதிப்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’ என்கிறார் அப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம். மக்கள்தொகை பெருக்கத்தோடு ஒப்பிடுகையில், தற்போதைய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பற்றாக்குறையிலேயே உள்ளது என்பது அரசு ஏற்றுக்கொள்ளும் உண்மை. ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் காட்டும் மிகக் குறைந்த சதவீதத்தினருக்குக்கூட, அனுபவமிக்க வழிகாட்டி (கைடு)களுக்கு என்றுமே பஞ்சம் தான் என்பதும் மறுப்பதற்கில்லை. நாட்டில் கல்வி நிறுவனங்களோடு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள், சிறந்த ஆசிரியர்கள் என அனைத்தும் அதிகரிக்க வேண்டும். ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரம் நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கிடைக்கவேண்டும். இது தற்போதைக்கு சாத்தியமா? இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே... அதற்காக, தற்போதைய நிலையை இதோடு விட்டுவிடாமல், தேவையான நிலையை அடைய அனைவரும் ஒருசேர முயற்சிமேற்கொள்ள வேண்டும்.