பஞ்சாப் பள்ளிகளில் செமஸ்டர் முறை அறிமுகம்
கடந்தாண்டு, ஒன்பதாம், 11ம் வகுப்புகளில் இம்முறை சோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாடங்கள் இரண்டாக பிரிக்கப்படும். முதல் பருவம் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து செப்டம்பர் 30 தேதிவரையிலும், இரண்டாவது பருவம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. முதல் பருவத்தில் 40 சதவீத பாடங்கள் இடம்பெறுகின்றன. பருவ முடிவில் அப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகளைக் கொண்ட தேர்வு நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள பாடங்கள் இரண்டாம் பருவத்தில் கற்பிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இவற்றில் 20 சதவீத மதிப்பெண் ‘இன்டேர்னல்’ மதிப்பெண்களாக வழங்கப்படுகிறது. மேலும், கல்லூரியைப் போன்றே கட்டாய மற்றும் தேர்வுசெய்துகொள்ளும் வகையிலான பாடப் பிரிவுகளை அமல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம், பஞ்சாபி, கணிதம், அறிவியல் ஆகியவை கட்டாய பாடங்களாகவும், சமூக அறிவியல் மற்றும் இந்தி ஆகியவை ‘ஆப்ஷனல்’ பாடங்களாகவும் இடம்பெற உள்ளன. கம்ப்யூட்டர் அறிவியல், உடற்கல்வி ஆகிய பாடங்கள் மூன்றாவது பிரிவில் ‘ஆப்சனல்’ பாடங்களாக சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கிரேடு மற்றும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பிடப்படுவார்கள் என்று பஞ்சாப் பள்ளி கல்வி வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.