கல்லூரி, பல்கலைகளில் இருந்து சமுதாய மாற்றம்...
கோவை: “சமுதாய மாற்றங்கள் முதலில் கல்லூரி, பல்கலைகளில் இருந்து துவங்க வேண்டும்,” என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கோவை பாரதியார் பல்கலையில் நடந்த 25வது பட்டமளிப்பு விழாவில், தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:இன்று நம் நாடு சிறந்த முறையில் முன்னேறியுள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. முன்பை விட இன்றைய மாணவர்களின் திறனும் அறிவும் அதிகம். காலத்துக்கு ஏற்ப கல்வித் துறையும் அதன் உட்பொருளும் மாற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உடனடி வேலை வாய்ப்பு பெற தொழில்நுட்ப கல்வி முக்கியம். பட்டப்படிப்புடன் ஒரு டிப்ளோமாவும் தேவை. கோவையில் கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் அதிகம். இதனால்தான் பிற மாவட்டங்களை விட கோவை நன்கு வளர்ந்துள்ளது. இன்று தகவல் தொடர்பு துறையில் பெரும் புரட்சி நடைபெற்று வருகிறது. இதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.ஐ.டி. துறையில் உலகுக்கே நாம் வழிகாட்டியாக உள்ளோம். வெளிநாடுகளிலும் தமிழக மாணவர்கள்தான் முன்னணியில் உள்ளனர். நாம் வெளிநாடு சென்று படித்த காலம் போய், இன்று வெளிநாட்டினர் இந்தியா வந்து படிக்கும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம். தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர் எண்ணிக்கை 2006ம் ஆண்டை விட அதிகரித்துள்ளது. 2006ல் 5 லட்சத்து 88,226 ஆக இருந்த கலைப் பாடங்கள் படிக்கும் மாணவர் எண்ணிக்கை, 2009ல் 6 லட்சத்து 85,866 ஆக உயர்ந்துள்ளது. 2006ல் 67,836 ஆக இருந்த பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரு லட்சத்து 22,931 ஆகவும், 58,646 ஆக இருந்த பாலிடெக்னிக் மாணவர் எண்ணிக்கை, இன்று ஒரு லட்சத்து 977 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆக, உயர்கல்வி படிப்பவர் எண்ணிக்கை 2006 ம் ஆண்டை விட இன்று மூன்று லட்சத்தை கடந்துள்ளது. இதில் மாணவியர் பங்களிப்பு அதிகம். உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்கலை பேராசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை விட ஆசிரியர்கள்தான் நூலகங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். சமுதாய மாற்றங்கள் முதலில் கல்லூரி, பல்கலைகளில் இருந்து துவங்க வேண்டும். மாற்றங்களுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் தயாராக இல்லாவிட்டால் மாணவர்களால் மாற்றங்களை கொண்டு வர முடியாது. இவ்வாறு, அமைச்சர் பொன்முடி பேசினார். அந்த காலத்தில் கணக்கு வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்வது பற்றி பேசிய அமைச்சர், 16ம் வாய்ப்பாடு வரை படபடவென்று தலைகீழாக ஒப்பித்து, அனைவரையும் வாய் பிளக்க செய்தார். தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, மத்திய தேர்வாணைய உறுப்பினர் பாலகுருசாமி, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் உட்பட கல்வியாளர்கள் பலர் பங்கேற்றனர்.