உள்ளூர் செய்திகள்

தேர்வு அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பமோ தட்டுப்பாடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை நவம்பர் 15ல் வெளியிட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அந்த தேர்வினை எழுத பட்டப்படிப்பும் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் என்பதால், மறுநாளில் இருந்தே தபால் அலுவலகங்களில் டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பம் வாங்க கடும் கூட்டம் அலைமோதியது. அவ்வப்போது வரும் விண்ணப்பங்கள் உடனடியாக விற்று தீர்ந்தன. அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், இன்னமும் ண்ணப்பம் கிடைக்காமல் பலர் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., உள்ளிட்ட 63 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பையும் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் பலர் விண்ணப்பம் வாங்க குவிகின்றனர்.ஆனால், டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பம் கிடைக்காமல் இருப்பதால் பலர் திண்டாடி வருகின்றனர். சேலம் கிழக்கு கோட்ட தலைமை தபால் நிலையில், இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. எனினும், கடந்த மூன்று நாட்களாக அங்கு விண்ணப்பம் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. குரூப்-2 மற்றும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பம் வாங்க வருபவர்கள் தினமும் ஏமாந்து செல்கின்றனர்.   இது குறித்து தபால் அலுவலக ஊழியர்கள் கூறுகையில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் விண்ணப்பம் ஸ்டாக் இல்லையென தெரிவித்துள்ளனர். அதனால், மூன்று நாட்களாக விண்ணப்பம் எங்களுக்கு வரவில்லை. விரைவில் தேவையான அளவு விண்ணப்பம் கிடைக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்