உள்ளூர் செய்திகள்

‘தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பது நமது கடமை’

சென்னை: தமிழக தொல்லியல் துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும்‘கல்வெட்டு மற்றும் தொல்லியல்’ பற்றிய 15 நாள் பயிலரங்கு டிச. 24ம் தேதி துவங்கியது. பள்ளிக் கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயிலரங்கை துவக்கி வைத்து பேசுகையில், “தமிழ் செம்மொழி என்பதை பிராமிக் கல்வெட்டு நமக்கு தெளிவாக விளக்குகிறது. கல்வெட்டுகள் காப்பாற்றப்பட வேண்டும். கல்வெட்டுகளையும், தொல்லியல் சின்னங்களையும் காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதுகுறித்து அனைவரும் சமுதாய விழிப்புணர்வு பெற வேண்டும்” என்றார். துவக்க விழாவில் தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் ஸ்ரீதர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ராமசாமி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன குழு உறுப்பினர் வேழவேந்தன், தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமி உட்பட பலர் பங்கேற்றனர். தமிழகத்தின் கலை, வரலாறு, பண்பாடு, கல்வெட்டு மற்றும் தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் நடக்கும் இப்பயிலரங்கில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகஙள், கல்லூரிகளிலுள்ள தமிழ், வரலாறு, தொல்லியல் தொடர்பான கல்லூரி ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 40 பேருக்கு இப்பயிலரங்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜனவரி 8ம் தேதி வரை நடைபெறும் இப்பயிலரங்கில் 10 நாட்கள் கல்வெட்டு, தொல்லியல் தொடர்பான வகுப்புகள் மற்றும் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொல்லியல் துறை அலுவலர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர். ஐந்து நாட்களுக்கு தொல்லியல் மற்றும் வரலாறு தொடர்பான இடங்களுக்குப் அழைத்துச் சென்று நேரடி விளக்கம் அளிக்கப்பட உள்ளது. பயிலரங்க நிறைவில், இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்