டி.என்.பி.எஸ்.சி., தேர்வை வெளிப்படையாக நடத்த மனு
மதுரை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை வெளிப்படையாக நடத்தக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வக்கீல் தியாகராஜன் தாக்கல் செய்த பொது நல மனு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 2 தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். டி.என்.பி.எஸ்.சி., தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ஆசிரியர் தேர்வாணையம் போல, கார்பன் ஷீட் வைத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். வினாக்களுக்குரிய விடைகளை வெளியிட வேண்டும். தேர்வாணைய மதிப்பெண் பட்டியலை நாளிதழ்களில் வெளியிட வேண்டும். மதிப்பெண் பட்டியலை தேர்வு எழுதுவோர் வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். போலீஸ் தேர்விலும் இந்த நடைமுறையை கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.