மாணவிக்கு விமான பயணம்: தலைமை ஆசிரியை
நாடு முழுதும் மத்திய அரசு சார்பில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த பிப்., 25ம் தேதி தேசிய திறனறி தேர்வு நடந்தது. இதில் அரியலுார் வானவநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் எட்டு பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா தேர்வில் வெற்றி பெறுபவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறி ஊக்கப்படுத்தினார்.அதன்படி அந்த தேர்வில் 8ம் வகுப்பு மாணவி மிருணாளினி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து மாணவி மிருணாளினியை நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை அமுதா திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றார். அங்கு சில இடங்களை சுற்றிக் காண்பித்து விட்டு நேற்று மாலை ரயிலில் அரியலுாருக்கு அழைத்து வந்தார். தலைமை ஆசிரியரின் இந்த செயலை பெற்றோர், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.