டாக்டர் தேர்வு: பணி நியமனத்துக்கு தடை
சென்னை: தமிழகத்தில், 1,021 டாக்டர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலின்போது குறைந்தபட்சம், 100 நாட்கள் சிகிச்சை அளித்த, மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு, அரசு பணியில் முன்னுரிமை வழங்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், 2021 மே மாதம் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. தமிழகத்தில் காலியாக இருந்த, 1,021 டாக்டர் பணியிடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் சிகிச்சை அளித்த தங்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கவும், அவ்வாறு வழங்காமல் தேர்வு நடவடிக்கைகளை தொடரக் கூடாது எனவும், உயர் நீதிமன்றத்தில், 14 டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர்.மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜராகி, கொரோனா காலத்தில், 300 நாட்களுக்கும் மேல் மனுதாரர்கள் பணியாற்றி உள்ளனர். இவ்வாறு பணியாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையில், தகுந்த கொள்கை வகுப்பதை உறுதி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது, என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஆந்திர அரசு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி உள்ளது.தமிழகத்தில், இதுகுறித்து எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை என்றும், தேர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாகி விட்டால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்வு நடந்து, முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டதால், பணி நியமன உத்தரவு வழங்க, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. மனுவுக்கு, அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11க்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.