இன்று துணைவேந்தர்கள் கூட்டம்: பொன்முடி பங்கேற்பாரா?
சென்னை: பொது பாடத்திட்டம் குறித்து, துணைவேந்தர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. பொது பாடத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி இந்த கூட்டத்தில், பங்கேற்பாரா, ஆப்சென்ட ஆவாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசின், 13 பல்கலைகளை சேர்ந்த துணைவேந்தர்களுக்கு, இன்று உயர்கல்வித்துறை சார்பில், ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் ரோசெட் ஹாலில், காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை, இன்ஜினியரிங் கவுன்சிலிங், பல்கலைகளுக்கான தமிழக அரசின் பொது பாடத்திட்டம், கருணாநிதி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின் உத்தரவுப்படி, இந்த கூட்டத்துக்கு, உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், கூட்ட தேதி அறிவிக்கப்பட்ட பின், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டது. அவருடன் தொடர்பில் இருந்த சிலரிடம் நேற்று வரை, விசாரணை நடந்துள்ளது.அமலாக்கத்துறை விசாரணையால், கடந்த 18ம் தேதி திருநெல்வேலியில் நடந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.இன்றைய கூட்டத்தில், பொதுபாடத்திட்டம் குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் பொது பாடத்திட்டத்துக்கு, பேராசிரியர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே, இந்த குழப்பமான சூழலில், இன்றைய கூட்டத்தில், பொன்முடி பங்கேற்பாரா அல்லது, ஆப்சென்ட் ஆவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.