சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பேராசிரியர்கள்
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் தலைமையிலான குழுவினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்களை கொண்டு பட்டியல் தயாரித்தனர். 22 அறிவியல் துறைகள், 178 துணை துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் இப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரது குறைந்தபட்சம் 5 ஆய்வு கட்டுரைகள், புலம், துணை புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.4வது முறையாக தேர்வுஉலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களும், இந்தியாவை சேர்ந்த 3500க்கும் கூடுதலான விஞ்ஞானிகளும் இதில் இடம்பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டு தாக்கத்துக்கான பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம நிகர் நிலை பல்கலை விஞ்ஞானிகள் பாலசுப்ரமணியம், சேதுராமன், மீனாட்சி, மாரிமுத்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.2019, 2020, 2021ம் ஆண்டுகளில் வெளியான உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இப்பல்கலையின் இந்த 4 பேராசிரியர்களும் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது தொடர்ந்து 4வது முறையாக இவர்கள் தேர்வாகி உள்ளனர். விஞ்ஞானி பாலசுப்ரமணியம், தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளை பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரமாக மாற்றுதல், கிரிப்டோகிராபி , செயலாக்க தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூலையில் ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.விஞ்ஞானி சேதுராமன், தாவர மூலப் பொருட்களில் இருந்து வரும் சேர்மங்களை கொண்டு, உலோக அரிப்புகளை தடுக்கும் காரணிகளை உருவாக்கும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். விஞ்ஞானி மீனாட்சி, கழிவு நீரில் உள்ள நச்சுத்தன்மை உடைய புளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம், பிற நச்சுக்களை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.விஞ்ஞானி மாரிமுத்து, அரிதான பூமியின் தாதுக்களை கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி, லேசர் வழி உமிழ்வதற்கான ஆய்வு, அபாயகர கதிர்வீச்சை தடுக்கும் கண்ணாடிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.