நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வி அவசியம்: அமைச்சர்
புதுடில்லி: சுதந்திரத்துக்குப் பின், கடந்த 76 ஆண்டுகளில் நம் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது, ஆனால் கல்வித்துறையில் இன்னும் முன்னேற வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு தரமான கல்வி மிகவும் அவசியம் என டில்லி கல்வி அமைச்சர் அதிஷி சிங் மர்லேனா பேசினார்.புதுடில்லி மாநில அளவில் இந்தியா ஆப் மை ட்ரீம் - 2047 என்ற போட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் தேர்வுபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பரிசுகளை வழங்கிய டில்லி கல்வி அமைச்சர் அதிஷி சிங் மர்லேனா பேசியதாவது: தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் மிகவும் அவசியம் என, கலந்தையாடலில் மாணவர்களே கூறினர்.அதேபோல நாட்டு மக்களிடம் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என எந்த மத மற்றும் இன பாகுபாடுகள் இன்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். சுதந்திரத்துக்குப் பின் கடந்த 76 ஆண்டுகளில் நம்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் கல்வித்துறையில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு தரமான கல்வி மிகவும் அவசியம்.நாட்டின் பல இடங்களில் தரமான கல்வி ஏராளமானோருக்கு கிடைக்காத சூழ்நிலைதான் நிலவுகிறது. அதேபோல, மருத்துவ வசதி மற்றும் வேலை வாய்ப்பும் ஏராளமானோருக்கு கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பின்றி பலர் திண்டாடுகின்றனர். டில்லி அரசுப் பள்ளி மாணவர்களும், இங்கு அமர்ந்திருக்கும் மற்ற பள்ளி குழந்தைகளும் நம் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பர் என உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.