பட்டதாரிகளுக்கு நிதியுதவி ஜனவரி முதல் வழங்கப்படும்
ஷிவமொகா: அடுத்தாண்டு ஜனவரி முதல் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு காங்கிரசின் ஐந்தாவது வாக்குறுதி நிறைவேற்றப்படும், என, தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு முகாமை, தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா துவக்கிவைத்தார். அவர் பேசியதாவது:எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். கடைசி வாக்குறுதியான வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவருக்கு முறையே 3,000 ரூபாய், 1,500 ரூபாய் வழங்கும் திட்டம், ஜனவரி முதல் அமலுக்கு வரும். இன்றைய வேலைவாய்ப்பு முகாமுக்கு, 79 நிறுவனங்கள் வந்துள்ளன. இந்த முகாமை வேலையில்லா இளைஞர்கள், இளம்பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள், படிப்பு முடிந்தபின் என்ன செய்வது என்று தெரியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் வாய்ப்புகள் இல்லாததால், சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, ஒரே தளத்தில் ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் இதுபோன்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், இளம் தலைமுறையினருக்கு வேலை கிடைக்க உதவும்.இந்த முகாம் மூலம் 12,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலை வாய்ப்பு உருவாக்குவதல், வேலை வழங்குதலுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விரைவில் 3,000 கர்நாடகா பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும். இப்பள்ளியில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும். மாணவர்கள் கன்னடத்தை முதல் மற்றும் இரண்டாம் மொழியாக எடுத்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கன்னட மீடியம் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், 43,000 கவுரவ ஆசிரியர்களும், 12,000 நிரந்தர ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் 20,000 ஆசிரியர்களை நியமிக்கும் எண்ணம் உள்ளது. இவ்வாறு அவர்பேசினார்.