அறிவியல் கண்காட்சியை தள்ளி வைக்க கோரிக்கை
புதுச்சேரி: பள்ளிகளில் நடத்த உத்தரவிட்டுள்ள அறிவியல் கண்காட்சியை தள்ளி வைக்க அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தி உள்ளது.புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கவுரவத் தலைவர் சேஷாசலம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பள்ளிகளில் தற்போது 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இடைநிலை தேர்வும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் இடைநிலைப் பருவத்தேர்வும் நடத்திட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.தற்போது இரண்டாம் இடைநிலை பருவத் தேர்வு வரும் 9ம் தேதி முதல் 17ம் வரையிலும், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 15ம் தேதிக்குள் பள்ளி அளவில் அறிவியல் கண்காட்சியை நடத்திட பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை, தொடர்ந்து 14ம் தேதி குழந்தைகள் தினம் என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் வருவதால், அறிவியல் கண்காட்சி நடத்துவது ஏற்புடையதாக இல்லை. ஆதலால், பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்துவதை தள்ளி வைத்திட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.